ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில்கள்
ஸ்ரீஆண்டாள் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர்
சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய முகப்பை உடைய பந்தல் மண்டபம் வரவேற்கிறது. இம்மண்டபத்தின் இருபுறமும் அமைந்துள்ள கடைகளுடன் வானமலை ஜீயர் மடம், வேதாந்த தேசிகர் சன்னதி, மணவாள மாமுனி சன்னதி ஆகியவை உள்ளன.
பந்தல் மண்டபத்தை அடுத்து உள்ளது திருக்கல்யாண மண்டபம். யாளி சிலைகளுடன் கூடிய பெரிய தூண்களுடன் அழகுற காட்சியளிக்கின்றது. நுழைவாயிலின் தென்புறத்தில் உள்ள தூணில் அப்பர் சிலை உள்ளது. மண்டபத்தின் விதானத்தில் நாயக்கர் கால இராமாயண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சரியான பராமரிப்பு இல்லாமையால் இவ்வோவியங்கள் அழிந்து வருகின்றன. திருக்கல்யாண மண்டபத்தைத் தாண்டினால் நாம் காண்பது கொடிமர மண்டபமாகும். இங்குள்ள தூண்களில் இராமன், இலக்குவன், அர்ச்சுனன், கர்ணன், இரதிதேவி, மன்மதன், குகன், கலைமகள், வீரபத்திரர், சக்தி, வேணுகோபாலன், விசுவகர்மா, ருத்ரகணிகை, ஜலந்தரன், மோகினி ஆகியோரின் சிலைகள் மிக அழகுடன் காட்சியளிக்கின்றன. வடக்குப்பிரகாரத்தில் பழைய ஏகாதசி மண்டபம், கண்ணாடி மண்டபம், தைல அறை, உபரி மடப்பள்ளி, பரமபத வாசல் ஆகியவை உள்ளன. கொடிமரத்தின் தென்புறம் மரத்தாலான மண்டபமும், அதில் சுதை வேலைப்பாடுடன் கூடிய கஜலட்சுமி சிலையும் உள்ளன. அருகே ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது. இச்சுற்றின் தென்மேற்கு மூலையில் இராமர், சீதை, இலக்குவன் ஆகியோருடைய பஞ்சலோகத்தால் ஆன சிலைகள் உள்ளன. வடமேற்கு மூலையில் ஸ்ரீநிவாசன், சுந்தரராஜன் சந்நதிகள் உள்ளன. உள் சுற்றில் தென்கிழக்கு மூலையில் பெரியாழ்வார் வழிபட்ட இலட்சுமி நாராயணரைக்காணலாம். இதன் அருகே ஆண்டாளின் திருப்பாவையில் சொல்லப்பட்டுள்ள மாதவிப்பந்தல் உள்ளது. பிரகாரச்சுவர்களில் 108 வைணவத்தலங்களும் அழகிய ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. மகாமண்டபம் மற்றும் அர்த்த மண்டப நுழைவாயில் இரு துவார பாலகர்களின் சிலைகள் உள்ளன. மகாமண்டபத்தில் வெள்ளிக்கிழமை குறடு எனப்படும் ஊஞ்சல் மண்டபம் உள்ளது. இங்குள்ள தூண்களில் திருமலை நாயக்கர் மற்றும் சொக்கப்ப நாயக்கர் தத்தம் மனைவியரோடு காணப்படும் சிலைகள் உள்ளன. கருவறையில் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் தங்க சிம்மாசனத்தில் காட்சியளிக்கின்றனர். கருடாழ்வார் சமமாக சுவாமியுடன் இருக்கும் காட்சியை இத்திருத்தலத்தில் மட்டுமே காணலாம்.
ஸ்ரீவடபத்ரசயனர் திருக்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர்
இக்கோவில் ஸ்ரீஆண்டாள் கோவில் கட்டுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உண்டாக்கப் பெற்றதாக கருதப்படுகிறது. இக்கோவிலில்தான் பெரியாழ்வார் இறைதொண்டு செய்து வந்தார். இக்கோவிலின் பெரியகோபுரமே தமிழ்நாட்டின் சின்னமாக உள்ளது. 196 அடி உயரம் கொண்ட இக்கோபுரம் பதினொன்று நிலைகளை கொண்டது. இக்கோபுரம் கி.பி(765-815) காலப்பகுதியில் பாண்டிய மன்னன் கட்டியதாக கூறப்படுகிறது.
இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் வடபத்ரசயனர் என்று அழைக்கப்படுகிறார். பாற்கடலின் ஆலிலை மீது இறைவன் பள்ளி கொண்டு காட்சி தருவதால் இப்பெயர் வந்தது. இங்குள்ள சந்நிதியில் இரண்டு தளங்கள் உள்ளன. மேல் தளத்தில் உள்ள கருவறையில் வடபத்ரசயனர் ஐந்து தலைகள் உடைய ஆதிசேடனை படுக்கையாகக் கொண்டு ஸ்ரீதேவி, பூமாதேவி அருகிலிருக்க சயனத்திருக்கோலத்தில் கிழக்கு முகமாகக் காட்சி தருகிறார்.கீழ்தளத்தில் இலட்சுமி நரசிங்கப்பெருமாள் சந்நதி உள்ளது.
இக்கோவிலின் இராஜகோபுரத்தை மகாமேருவுக்கு இணையாகக் கம்பநாட்டாழ்வார் பாடிய பாடல் கோபுரக்கல்வெட்டில் உள்ளது. இக்கோபுரத்தின் தென் பிராகாரத்தில் ஸ்ரீஆண்டாள் அவதரித்த நந்தவனம் உள்ளது.
ஸ்ரீவைத்தியநாதசுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர்
இக்கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து இராசபாளையம் செல்லும் சாலையில் உள்ள மடவார் வளாகம் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டிருக்கும் இறைவன் ஸ்ரீவைத்தியநாதசுவாமி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இக்கோவிலின் இராசகோபுரம் 9 நிலைகளுடன், 134 அடி உயரம் கொண்டது. புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களின் முதல் நாள் அன்று, கதிரவனின் கதிர், கருவறையில் படும்படி இக்கோவில் கட்டப்பட்டுள்ளது ஒரு சிறப்பம்சமாகும். இராசகோபுரத்தின் அருகில் சிவகெங்கை தீர்த்தம் என்றழைக்கப்படும் தெப்பக்குளம் உள்ளது. கோவிலின் முன்புறத்தில் நடுவே மண்டபத்துடன் கூடிய மற்றொரு தெப்பக்குளம் ஒன்று உள்ளது. ஸ்ரீவைத்தியநாதர் இங்கு லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். ஸ்ரீவைத்தியநாதர் சந்நதியின் வலப்புறத்தில் சிவகாமி அம்மனுக்கு கோவில் உள்ளது. கஜலட்சுமி, 63 நாயன்மார்கள், நவக்கிரகங்கள், துர்காதேவி, சிவகாமி அம்மனுடன் கூடிய நடராசப்பெருமாள், பைரவர், சனீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், விநாயகர், சரசுவதி, தட்சிணாமூர்த்தி ஆகியோர்க்கு தனித்தனி சந்நதிகள் உள்ளன. பிரதோச காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். வைகாசி மாதம், பிரமோற்சவம் திருவிழாவின் போது தேரோட்டம் நடைபெறும். தனது தீராத வயிற்று வலியை குணமாக்கியதிற்க்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக மதுரை திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட நாடகசாலை மண்டபம் உள்ளது. நாயக்கர்கள் காலத்தில் வரையப்பட்ட ஓவியங்களை இங்கு காணலாம். இத்திருத்தலம் சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்ந்த தலங்களில் ஒன்றாகும்.
தென் திருப்பதி, திருவண்ணாமலை
தென் திருப்பதி என்றழைக்கப்படும் இத்திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வடமேற்கே 3 கி.மீ தொலைவில் ஒரு சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீநிவாசப்பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனின் தோற்றம் திருப்பதி வெங்கடேசப்பெருமாளின் தோற்றமேயாகும். இங்கு இறைவனை சேவிப்பது திருப்பதி சென்று இறைவனை தரிசிப்பதற்கு சமமாகும். இக்குன்றின் இறக்கத்தில், கிழக்குப்பகுதியில் கோபால்சாமி கோயில் உள்ளது. மலையடிவாரத்தில் மேற்குப்பகுதியில் வனப்பேச்சியம்மன் கோயில் உள்ளது. மேலும் இக்குன்றின் அடிவாரத்தில் ‘கோனேரி’ என்றழைக்கப்படும் குளம் உள்ளது. இக்குளக்கரையில் 12 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்ட விநாயகர் சிலை உள்ளது.
இக்குன்றின் மீது ஏறுவதற்கு மிக அகலமான படிக்கட்டுகள் உள்ளன. தற்போது இப்படிக்கட்டுகளில் நடந்து செல்லும் பக்தர்கள் நிழலில் செல்வதற்காக மேற்க்கூரை இடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் மாதாந்திர சனிக்கிழமையும் விசேடமானதாகும். புரட்டாசித்திங்களில் 5 சனிக்கிழமைகளிலும் கருட சேவைத்திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சிறப்புப்பேருந்துகள் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் இத்தலம் வரை இயக்கப்படுகின்றன. விருதுநகர், மதுரை, தேனி, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரங்களிலிருந்து மக்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.
தினமும் காலை முதல் இரவு வரை ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திருந்து அரசுப்பேருந்து மற்றும் சிறுபேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன.
காட்டழகர் கோவில் (செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர்)
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள செண்பகத்தோப்பு காட்டுப்பகுதியில் உள்ள மலைக்குன்றின் மீது இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு திருமால் காட்டழகர் என்னும் பெயரில் காட்சி அளிக்கிறார். காலையிலும், மாலையிலும் அரசுப்பேருந்து ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து செண்பகத்தோப்பு வரை இயக்கப்படுகின்றன. அங்கிருந்து அடர்ந்த காடுகளிடையே சுமார் 5 கி.மீ நடந்து சென்றால் கோவில் மலை அடிவாரத்தை அடையலாம். கோவில் அடிவாரத்தில் ‘நூபுர கங்கை’ எனப்படும் தீர்த்தம் உள்ளது. இது துர்வாச முனிவரால் சாபம் பெற்ற சுபதா முனிவர் சாப விமோசனம் பெற்ற இடமாகும். மலை மீது ஏறிச்செல்ல 246 படிக்கட்டுகள் உள்ளன. இங்கு சுந்தரராசப்பெருமாள் என்ற்ழைக்கப்படும் காட்டழகர், ஸ்ரீதேவி (சுந்தரவல்லி) மற்றும் பூமிதேவியருடன் (சௌந்தரவல்லி) நின்ற கோலத்தில் அருள் தருகிறார். அர்த்த மண்டபத்தில் துவார பாலகர், சுபதா முனிவர் (மண்டூக மகரிஷி), சக்கரத்தாழ்வார், சேனை முதல்வர், ஆதிவராகர், ஞானப்பிரான் ஆகியோரின் சிலைகள் உள்ளன. மகாமண்டபத்திற்கு வெளியே கருடாழ்வார் சந்நிதி இறைவனைப் பார்த்தவாறு அமைந்துள்ளது. கருடாழ்வாரின் தென்புறம் காவல் தெய்வங்களான பதினெட்டாம்படிக் கருபசாமி, எமன், காலன், தூதன் ஆகியோரின் சிலைகள் உள்ளன. இம்மண்டபத்தின் தூண்கள் அழகிய வேலைப்பாடுடன் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் வருடப் பிறப்பு நாள் மற்றும் ஒவ்வொறு சனிகிழமையிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தமிழ் மாத கடைசி சனிக்கிழமைகளில் பெருமளவு பக்தர்கள் அழகரை தரிசிக்கின்றனர்.